3 கோவிலில் கும்பாபிஷேகம் திருத்தணியில் கோலாகலம்
திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலின் மூன்று உபகோவில்களில், நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திருத்தணி முருகன் மலைக்கோவில் பகுதியில், செங்கழுநீர் விநாயகர், படவேட்டம்மன் மற்றும் ஏகாத்தம்மன் என, மூன்று கோவில்கள் உள்ளன. இக்கோவில்கள், முருகன் கோவிலின் உபகோவில்கள். மூன்று கோவில்களிலும் திருப்பணிகள் நடந்து, நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. அன்று காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் முதல்கால யாக சாலை பூஜை நடந்தன. இதற்காக, மூன்று கோவில் வளாகத்திலும் யாகசாலை, 36 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. மேலும், மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை மற்றும் கலச ஊர்வலம் நடந்தது. காலை 8:00 மணிக்கு கோவில் விமானத்தின் புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.