கால்நடைகளை துன்புறுத்தினால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர், கால்நடைகளை துன்புறுத்தினாலும், பொது இடங்களில் வதை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், காவல்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை விரும்பிகள் ஆகியோரை கொண்டு பிராணிகள் துயர் துடைப்பு சங்கம் செயல்பட்டு வருகிறது. வாகனங்களில் கால்நடைகளை ஏற்றிச் செல்லும்போதும், கால்நடை விற்பனை சந்தை மற்றும் இறைச்சிக்காகவும் கால்நடைகள் துன்புறுத்தப்படுகிறது.எனவே கால்நடை இறைச்சி அறுவை மற்றும் விற்பனை கூடம், கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்லும்போது உடல் தகுதி, நோய் பாதிப்பு உள்ளதா என்ற மருத்துவ சான்று அவசியம் பெறவேண்டும். கால்நடைகளை அளவுக்கு அதிகமாக வாகனங்களில் கொண்டு செல்லக் கூடாது. குடிநீர், தீவனம் இருப்பு வைக்க வேண்டும். இதனை, போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகளை உணவு தேட அனுமதிக்கும் கால்நடை உரிமையாளர்களுக்குகடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் கால்நடைகளை இறைச்சிக்காக வதை செய்வது தடை செய்யப்பட்ட மற்றும் தண்டனைக்குரிய குற்றம். மேற்கண்ட விதிமுறையினை கால்நடைகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.