வடிகால் வாயிலாக மழைநீரை வெளியேற்ற அறிவுரை
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். சம்பா பருவத்தில், 1,250 ஏக்கர் பரப்பில் நெல் பயிரும், 65 ஏக்கர் பரப்பில் பயிறு வகைகள், 140 ஏக்கர் பரப்பில் வேர்க்கடலை, எள்ளு போன்ற எண்ணெய் வித்து பயிர்கள் விவசாயிகள் செய்திருந்தனர்.இந்நிலையில், மேற்கண்ட பயிர்கள் அறுவடைக்கு, தயாராக இருந்த போது, கடந்த 11ம் தேதி முதல், இரு நாட்கள் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்தது.இதனால் பயிர் நிலங்களில் மழைநீர் தேங்கியும், நெல், வேர்க்கடலை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.இதையடுத்து, விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளிடம் பயிரில் தேங்கியிருந்த மழைநீரை வடிகால் அமைத்து வெளியேற்ற அறிவுறுத்தினர்.வேளாண் துறை உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:ஏற்கனவே, 'பெஞ்சல்' புயலால் பெய்த கனமழையால் செருக்கனுார், எஸ்.அக்ரஹாரம், வி.கே.என்.கண்டிகை, சூர்யநகரம், பீரகுப்பம், வீரகநல்லுார் உள்ளிட்ட பல பகுதிகளில், 106 ஏக்கர் பரப்பில் நெற்பயிர், 24 ஏக்கர் பரப்பில் பயிறு வகை மற்றும் எண்ணெய் வித்துகள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. அவற்றை நேரில் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். கடந்த 11 மற்றும் 12ம் தேதி பெய்த கனமழையால், சேதம் அடைந்த பயிர் குறித்து வேளாண் அலுவலர்கள் வாயிலாக கணக்கெடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.