வருவாய் துறையினர் அலட்சியம் சேதமடைந்த வேளாண் அலுவலகம்
திருத்தணி:திருத்தணி பழைய திரவுபதியம்மன் கோவில் அருகே, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் வேளாண் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.மேலும், இந்த அலுவலகத்தில் தினமும் வேளாண் அலுவலர்கள், துணை அலுவலர்கள், 'அட்மா' திட்டத்தில் பணியாற்று ஊழியர்கள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், தரைத்தளம் மற்றும் முதல் அடுக்கு கட்டடம் முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் பழுதடைந்தும் செடிகள் வளர்ந்தும், அலுவலகத்தில் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதம் அடைந்துள்ளன.இதுதவிர, மழை பெய்யும் போது மழைநீர் ஓழுகி ஆவணங்கள் நனைந்து விடுகின்றன. மேலும், கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:உதவி இயக்குனர் அலுவலக கட்டடம் பழுதடைந்ததால் புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் சார்பில், பல மாதங்களுக்கு முன், 1.50 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து தயார் நிலையில் உள்ளது.ஆனால், வருவாய் துறையினர், எங்கள் அலுவலகம் அருகே உள்ள பாறை புறம்போக்கு நிலத்தை அளந்து கொடுப்பதில் காலதாமதம் செய்வதால், புதிய கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.