திருத்தணியில் 17 காலி பணியிடங்கள் வளர்ச்சி பணிகள் பாதிப்பதாக குற்றச்சாட்டு
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 43 அலுவலக பணியிடங்களில், தற்போது 26 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 17 பணியிடங்கள் காலியாக உள்ளதால், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருத்தணி முதல்நிலை நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகளில், 16,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகராட்சியில், 12.45 சதுர கி.மீ., துாரத்தில், 370க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் தெருக்கள் உள்ளன.தற்போது, திருப்பாற்கூடல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், மழைநீர் கால்வாய், சிமென்ட் சாலை மற்றும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளை முறையாக கண்காணித்து, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பணியை நகராட்சி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். நகராட்சியில் கமிஷனர், பொறியாளர், ஓவர்சீஸ் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை, மொத்தம் 43 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், 26 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதில் மேலாளர், கணக்காளர் ஆகிய இருவரும் பதவி உயர்வு பெற்று மாற்றலாகி செல்ல உள்ளனர்.நகராட்சி பொறியாளர் - 1, இளநிலை பொறியாளர் - 1, பதிவு எழுத்தர் - 1, பணி ஆய்வாளர் - 3, படம் வரைவாளர் - 1, துப்புரவு அலுவலர் - 1, துப்புரவு ஆய்வாளர் - 2, பில் கலெக்டர் - 3, தட்டச்சர் - 2, இளநிலை உதவியாளர் - 3 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.இதனால், நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் துப்பரவு பணியை கண்காணிக்க முடியாமல் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி சுற்றுலா தலமாக உள்ளதால், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே, கலெக்டர்உரிய நடவடிக்கை எடுத்து, நகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என, நகர மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:நகராட்சியில் முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. நகராட்சி பொறியாளர் ஓய்வு பெற்றுவிட்டார். மேலாளர் பதவி உயர்வு பெற்று ஓரிரு நாளில் மாற்றலாகி செல்ல உள்ளார். பொறியியல் பிரிவிலும் காலி பணியிடங்கள் அதிகரித்து வருவதால், வளர்ச்சி பணிகள் உடனுக்குடன் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை என்பது குறித்து பட்டியல் தயாரித்து, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.