குடி மையமாக மாறி வரும் ஏ.என்.குப்பம் அணைக்கட்டு
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே ஏ.என்.குப்பம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில், ஏராளமான மக்கள், தங்கள் குடும்பத்துடன் அந்த அணைக்கட்டு பகுதியில் கூடுவது வழக்கம். சுற்றுலா தளம் போல் காட்சியளிக்கும் அந்த இடத்தில் போதிய கண்காணிப்பு இல்லாததால், சிலர் அப்பகுதியில் மது அருந்துவது, குடித்த மது பாட்டில்களை உடைப்பது, குடி போதையில் ஆற்றில் ஆபத்தாக குளிப்பது, மற்றவர்களுக்கு இடையூறாக நடந்து கொள்வது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.இதனால் அணைக்கட்டு பகுதியில் காணும் இடம் எல்லாம், மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் பரவி கிடக்கின்றன. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் அச்சம் அடைவதுடன், முக சுளிப்புக்கு ஆளாகின்றனர்.நீர் வளத்துறையினர் மற்றும் கவரைப்பேட்டை போலீசார், அணைக்கட்டு பகுதியை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.