ஆரணி ஆறு வெள்ளப்பெருக்கால் பாலம் துண்டிப்பு சாலை, வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு
கனமழையால் ஆரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, ஆண்டார்மடம் பாலம் அடித்து செல்லப்பட்டது. மேலும், சாலை மற்றும் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், மக்கள் தவித்து வருகின்றனர். பொன்னேரி
அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே காட்டூர் - பழவேற்காடு சாலையில் இருந்த தரைப்பாலம் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லாத வகையில், இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனால் ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு, கடப்பாக்கம், அபிராமபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், 10 - 15 கி.மீ., சுற்றிக்கொண்டு சென்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவில் உள்ள அரசு துவக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர், 30 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. சுவர் இடிந்த பகுதி வழியாக மழைநீர், பள்ளி வளாகத்திற்குள் 2 அடி உயரத்திற்கு சூழ்ந்தது. பள்ளி சென்ற மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகத்தினர், தேங்கிய மழைநீரை மோட்டார் வாயிலாக வெளியேற்றினர். அதேபோல், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே, வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் மூதாட்டி ஒருவர் சிக்கினார். பள்ளிப்பட்டு போலீசார் மற்றும் பகுதி மக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். வெங்கம்பேட்டை கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்ததால், கிராமத்தினர் அவதிப்பட்டனர். பள்ளிப்பட்டு அருகே அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 21 மீட்டராக உயர்ந்தது. நேற்று காலை முதல், அணையின் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து நெடியம், சொரக்காய்பேட்டை, புண்ணியம், சாமந்தவாடா உள்ளிட்ட கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர்
கனமழையால் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கலெக்டர் வீட்டில் இருந்து வனத்துறை அலுவலகம் செல்லும் சாலை, எஸ்.பி., அலுவலகம் எதிரில் முதன்மை கல்வி அலுவலகம் - மருத்துவக் கல்லுாரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு உள்ளனர். திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கிய மழைநீரும் மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகம் மழைநீரில் மிதப்பதால், வீரர் - வீராங்கனையர் மற்றும் ஊழியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. - நமது நிருபர் குழு -