கோடை விடுமுறை வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
திருவள்ளூர்:கோடை விடுமுறை கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள், கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.திருவள்ளூரில், 14 ஒன்றியங்களில், 1,720 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் கர்ப்பணியருக்கு இணை உணவு, 6 - 60 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அளிக்கப்படுகிறது.மேலும், மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்த்தல், முன்பருவ கல்வி அளித்தல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இம்மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்கள், நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் மணிமேகலா தலைமை வகித்தார். இதில், மாநில உதவி தலைவர் லட்சுமி, மாவட்ட செயலர் லதா முன்னிலை வகித்தனர்.அங்கன்வாடி பணியாளர் அனைவருக்கும் ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும். மாவட்டம் முழுதும் காலியாக உள்ள 700 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுதும் இருந்து, 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.