அரசு பள்ளியில் கலைத்திருவிழா மாணவர்கள் அசத்தல்
ஆர்.கே.பேட்டை:அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே, கலைத்திருவிழா ஆர்.கே.பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய விழாவின் முதல் நாளில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். நேற்று ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில், பரத நாட்டியம், பாட்டு, களிமண் சிற்பம் உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. ஆர்.கே.பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் முன்னிலையில், களிமண் கொண்டு மாணவர்கள் பல்வேறு சிற்பங்களை உருவாக்கினர். கண்ணெதிரில் மாணவர்கள் உருவாக்கிய சிற்பங்களை கண்டு ஆசிரியர்களே வியப்பில் ஆழ்ந்தனர். மாணவர்களின் கற்பனை திறனை மதிப்பிட முடியாமல் திணறினர். ஆழ்ந்து பரிசீலித்து சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து மாணவர்களை பாராட்டினர். இறுதி நாளான இன்று பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.