திடக்கழிவுகளை அகற்ற நவீன வசதிகள் தீர்ப்பாயத்தில் ஆவடி மாநகராட்சி தகவல்
சென்னை:ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை. குப்பை கிடங்குகளில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.இதை தடுக்க உத்தரவிட வேண்டும் என, திருவள்ளூரைச் சேர்ந்த ராஜாமணி என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை, தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.இந்நிலையில், தீர்ப்பாயத்தில் ஆவடி மாநநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கை:மொத்தம் 48 வார்டுகளை உடைய ஆவடி மாநகராட்சியின் மூன்றில் ஒரு பங்கு பகுதியில் ராணுவம், காவல் துறைக்கு சொந்தமான இடங்களும், குடியிருப்புகளும் உள்ளன.மீதமுள்ள 1,19,328 வீடுகளில், 5.63 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த வீடுகளில் இருந்து தினமும் 181 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.கழிவுகளை உரமாக மாற்ற, 19 இடங்களில் நுண் உரமாக்கல் மையங்களும், குப்பையை நேரடியாக உரமாக மாற்ற 21 'ஆன்சைட் கம்போஸ்டிங்' மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.துாய்மை இந்தியா திட்டத்தின்கீழ், சோழம்பேடு, தெலுங்கு காலனி, முத்தாபுதுப்பேட்டை, சேக்காடு கிராமங்களில் நுண் உரமாக்கல் மையங்களின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.சேக்காடு கிராமத்தில் தானியங்கி வசதியுடன், தினமும் 50 டன் கழிவுகளை நுண் உரமாக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே கழிவை பிரித்தெடுப்பது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.சேக்காடு குப்பை கிடங்கில் உள்ள கழிவு அளவிடப்பட்டு, நுண் உரமாக்கப்பட்டு அகற்றப்படும். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பணிகள் முடிக்கப்படும். குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.