அமிர்தாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது
திருத்தணி:திருத்தணி அமிர்தாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அண்ணா தலைமைத்துவ விருதும், பள்ளியின் வளச்சி பணிகளுக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசும் கல்வி துறை சார்பில் வழங்கப்பட்டது.தமிழகம் முழுதும் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா தலைமைத்துவ விருதும், பள்ளிக்கு, 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதுக்கான தகுதியானவர்களை தேர்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் தேர்வுக்குழு அமைத்து தேர்வு செய்த பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் பெயர்கள் விவரம் மாநிலக் குழுவுக்கு அனுப்பி வைத்து தேர்வு செய்யப்படுவர்.அந்த வகையில், 26 தொடக்கப் பள்ளிகள், 24 நடுநிலைப் பள்ளிகள், 17 உயர்நிலைப் பள்ளிகள், 33 மேல்நிலைப் பள்ளிகள் என, 100 அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது.இதில் திருத்தணி அமிர்தாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனுக்கு அண்ணா தலைமைத்துவ விருதும், பள்ளிக்கு, 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த, 6ம் தேதி திருச்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ், அரசு முதன்மை செயலர் சந்திரமோகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு ஆகியோர் பங்கேற்று, 100 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருதும், தலா, 10 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினர்.இதில் அமிர்தாபுரம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனுக்கு விருதும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா, அமிர்தாபுரம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசனை நேற்று பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.