பாலம் கட்டுமானம்; இரு மடங்கு நெரிசலால் அவதி
குன்றத்துார் : வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022, ஜனவரியில் துவங்கியது. இங்கு 690 மீட்டர் நிளம், 17.20 மீட்டர் அகலத்தில், 18 மாதங்களில் பாலத்தை கட்டி முடிக்க காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டு, 10 மாதங்கள் கடந்த நிலையிலும், பாலம் கட்டுமான பணி நிறைவடையவில்லை. மந்த கதியில் நடக்கும் பலம் கட்டுமான பணியால், படப்பையில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது.காலை, மாலை நேரத்தில் வாகனங்கள் நீண்ட துாரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால், மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வியாபாரிகள், பொதுமக்கள் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க, அவர்கள் எதிர்பார்கின்றனர்.