வெளிநாடுகளில் படிப்போர் வங்கி கடன் பெற அழைப்பு
திருவள்ளூர்:பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம், வெளிநாட்டில் கல்வி பயில விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகமான 'டாப்செட்கோ' மூலம், 100 பேருக்கு, வெளிநாட்டு பல்கலைகளில் உயர்கல்வி பயிலும் மாணவ - மாணவியருக்கு வங்கி கடன் வழங்கப்பட உள்ளது. ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக, 85 சதவீதம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமும், மீதமுள்ள 15 சதவீதம் தமிழக அரசு மூலமும் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிற்கு 8 சதவீதம். விண்ணப்பப் படிவத்தை, www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, வங்கி கோரும் ஆவண நகல்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.