விதிமீறி போஸ்டர் ஒட்டிய ஐவர் மீது வழக்கு பதிவு
திருவள்ளூர்:போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டிய ஐவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூர் நகரின் பிரதான சாலைகளில் விளம்பர பலகைகள், சாலையோர சுவர்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விளம்பர பேனர்களால், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. திருவள்ளூர் நகரில் நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகம் அருகில், ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பு, ஆவடி சாலையோரங்களில், சிலர் விளம்பர சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர். திருவள்ளூர் டவுன் போலீசார், அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக, சிறுவானுார் கிராமத்தைச் சேர்ந்த பிரேம், 30, விஜி, 32, மணிமாறன், 28, மணி, 29 மற்றும் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த அப்பு, 45, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், சுவரொட்டி வைத்திருந்த 'டாடா ஏஸ்' வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.