பார்க்கிங் ஏரியாவாக மாறிய பஸ் நிறுத்தத்தால் பயணியர் அவதி
திருமழிசை:திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி. சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் அரசு டிப்போ அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பதி, வேலுார், பெங்களூரு மார்க்கமாக செல்லும் பேருந்துகளில் பயணியர் சென்று வருகின்றனர்.அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை பகுதியில் பயணியர் பயன்படுத்தும் வகையில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், இந்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதி பல நேரங்களில் கார், லாரி, போலீஸ் ரோந்து வாகனம் போன்ற வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது.இதையடுத்து, சென்னை - பெங்களூரு மார்க்கமாக வரும் பேருந்துகள் அரசு டிப்போ முன்புறம் நிறுத்தி பயணியரை ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணியர் வெயில், மழை நேரங்களில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூந்தமல்லி அரசு டிப்போ அருகே பயணியர் நிழற்குடையை பயன்படுத்தும் வகையில் அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.