| ADDED : டிச 01, 2025 03:58 AM
சோழவரம்: ஒரக்காடு - அருமந்தை சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் கட்டுமானங்களால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர். சோழவரம் அடுத்த ஒரக்காடு - அருமந்தை சாலையில் உள்ள மாறம்பேடு பகுதியில், போக்குவரத்திற்கு இடையூறாக கான்கிரீட் கட்டுமானங்கள் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். எதிரெதிரே வாகனங்கள் வரும்போது கூடுதல் சிரமங்களுடன் பயணிக்கின்றனர். இதே பகுதியில், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையின் இணைப்பு சாலையும் அமைந்துள்ளது. மீஞ்சூரில் இருந்து இணைப்பு சாலையில் பயணித்து அருமந்தை சாலைக்கு திரும்பும்போது, வாகனங்கள் கான்கிரீட் கட்டுமானங்களை உரசியபடி செல்லும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் சாலையில் கான்கிரீட் கட்டுமானங்கள் இருப்பது தெரியாத நிலையில், விபத்து ஏற்படும் அபாய சூழல் உள்ளது. மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை பணிகளின்போது தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானங்கள் பயன்பாடில்லாத நிலையில், அதே இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டு உள்ளன. எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள கான்கிரீட் கட்டுமானங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.