தேரடி சாலை சந்திப்பில் நெரிசல் பீக் ஹவர்சில் மக்கள் தவிப்பு
பொன்னேரி, செப். 9-பொன்னேரி தேரடி சாலை சந்திப்பில், 'பீக் ஹவர்' எனப்படும் அலுவலக நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, பொன்னேரி நகர பகுதிக்கு பேருந்து, வேன், இருசக்கர வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர். காலை - மாலை நேரங்களில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பொன்னேரி நகர பகுதியில் உள்ள தேரடி சாலை சந்திப்பை கடக்கும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பணிக்கு செல்வோர், பள்ளி மாணவர்கள் என, பல்வேறு தரப்பினர் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்க, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பகுதிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரக்தியில் உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொன்னேரி - பழவேற்காடு சாலையில் பஜார் பகுதி உள்ளது. இங்கு துவங்கி தேரடி வரை, சாலையோர கடைகள் அதிகளவில் உள்ளன. இவை, சாலையின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர். மேலும், மற்ற வணிக வளாகங்கள், மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு செல்வோரும், சாலையோர கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், சாலை குறுகி, தேரடி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய தேரடி தெருவில் உள்ள நிலையத்தில் இருந்து பழவேற்காடு, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள், தேரடி சாலை சந்திப்பில் திரும்ப முடியாமல் திணறுகின்றன. எனவே, சாலையோர கடைகளை வரைமுறைப்படுத்தி, எல்லைக்கோடு ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும். இதுதொடர்பாக, விரைவில் நீதிமன்றத்தை நாட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.