உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளியில் சத்துணவு கூடம் கட்டும் பணி: மரங்களுக்கு நடுவே கட்டுவதால் எதிர்ப்பு

அரசு பள்ளியில் சத்துணவு கூடம் கட்டும் பணி: மரங்களுக்கு நடுவே கட்டுவதால் எதிர்ப்பு

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்., கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன் முன்னாள் மாணவர்கள் ஏழு மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வந்தனர். தற்போது, பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன.இந்நிலையில், சத்துணவு கூட கட்டுமான பணிகளை மரங்களுக்கு இடையே கட்ட துவங்கியுள்ளனர். இதற்கு முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே சத்துணவு கூடம், இருந்த இடத்திலேயே புதிய கட்டடம் கட்ட வேண்டும் என ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:தொடக்கப் பள்ளி வளாகத்தில், பழுதடைந்த சத்துணவு கூடம் மற்றும் பள்ளிக்கட்டடம் மூன்று மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. அதே இடத்தில் சத்துணவு கூடம், பள்ளிக்கட்டடம் கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப் பட்டது. இதில், பள்ளி கட்டடம் இடிக்கப்பட்ட பகுதியில் கட்டுவதாகவும், சமையல் கூடம் அங்கே கட்டாமல் மரங்களுக்கு இடையே கட்டும் பணிகள் துவங்கி யுள்ளனர். இடிக்கப்பட்ட இடத்தில் பள்ளிக்கட்டடம் கட்டினால் மாணவர்கள் வகுப்பறைக்கும், சத்துணவு கூடத்திற்கும் செல்ல வழி இருக்காது. மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு சத்துணவு கூடம் கட்டுவதை மாற்றி அமைக்க வேண்டும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை