பூண்டியில் டவர் அமைக்கும் பணி தாமதம்
திருவள்ளூர்:பூண்டி நீர்தேக்கத்தில் நீர் இருப்பு கண்டறியும் 'டவர்' அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் பூண்டி நீர்தேக்கம் முதன்மையாக விளங்குகிறது. கொசஸ்தலை ஆற்றின் நடுவில் கட்டப்பட்ட இந்த நீர்தேக்கத்தில், மழை காலத்தில் தேங்கும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் ஆகியவற்றைக் கொண்டு, சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.இங்கு சேகரமாகும் குடிநீர் சோழவரம் மற்றும் புழல் ஆகிய ஏரிகளுக்கு முறையே பேபி மற்றும் பிரதான இணைப்பு கால்வாய் வாயிலாக கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது.பூண்டி நீர்தேக்கத்தை ஆழப்படுத்தி, ஷட்டர் சீரமைத்து, நீர் அளவை கண்டறியும் புதிய 'டவர்' அமைக்கும் பணி உள்ளிட்ட சீரமைப்பு பணி, 9.48 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. சேதமடைந்த 16 மதகு 'ஷட்டர்' சீரமைக்கப்பட்டு, அவசர கால 'ஷட்டர்' தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், மழை மற்றும் தீபாவளி விடுப்பிற்காக பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றவர்கள், இதுவரை பணிக்கு திரும்பவில்லை. இதனால், நீர்தேக்கத்திற்குள் கட்டப்பட்டு வந்த, நீர் அளவு கண்டறியும் 'டவர்' கட்டுமான பாதியில் நிற்கிறது.விடுப்பில் சென்ற தொழிலாளர்கள் வந்தபிறகே, டவர் கட்டுமான பணி துவங்கும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.