நந்தியாற்றில் தடுப்பணை சேதம் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் இருந்து நந்தியாறு உருவாகி, திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம், செருக்கனுார், திருத்தணி வழியாக ராமாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் கலந்து, பூண்டி ஏரிக்கு சென்றடைகிறது.இந்த ஆற்றின் குறுக்கே, 10க்கும் மேற்பட்ட இடங்களில், நீர்வளத் துறையினர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால், விவசாய கிணறுகள் மற்றும் ஊராட்சிகளின் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வந்தன.இந்நிலையில், தடுப்பணைகள் முறையாக பராமரிக்காததால், தற்போது சேதமடைந்து வருகிறது. திருத்தணி அடுத்த விநாயகபுரம் கிராமம் அருகே செல்லும் நந்தியாற்றின் குறுக்கே, 15 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு குடிநீர் வாரியம் வாயிலாக, 8.80 லட்சம் ரூபாய் மதிப்பில், 25 மீட்டர் அகலம், 1.10 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.இந்த தடுப்பணையால், அப்பகுதியில் 50 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்றது. மேலும், விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்தது.எட்டு மாதங்களுக்கு முன் தடுப்பணை சேதமடைந்தது. இதனால், தடுப்பணையில் தேங்கும் தண்ணீர் வீணாகி வந்தது. இதனால், விநாயகபுரம் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, கலெக்டர் ஆய்வு செய்து, சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.