தீப திருவிழா: அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்
ஆர்.கே.பேட்டை:கார்த்திகை தீப திருவிழா வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கோவில்கள் மற்றும் வீடுகளில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட உள்ளனர். இதையொட்டி, அகல் விளக்குகள் தயாரிப்பதில் மண்பாண்ட தொழிலாளரண்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த சிங்கசமுத்திரம் கிராமத்தில், பாரம்பரியமாக மண்பாண்டம் தயாரிப்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தற்போது கார்த்திகை தீப திருநாளை ஒட்டி, அகல் விளக்கு தயாரிப்பதில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வெயிலில் காயவைத்து, பின் சூளையில் சுட்டு எடுக்கின்றனர். அதை தொடர்ந்து ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார கிராமங்களில் விற்பனை செய்கின்றனர்.மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அகல் விளக்கு தயாரிப்பு தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் சுறுசுறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.10க்கு, நான்கு அகல் விளக்குகள் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.