உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  திருத்தணி பஸ் நிலைய பணி நிறுத்தம் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்குவதில் தாமதம்

 திருத்தணி பஸ் நிலைய பணி நிறுத்தம் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்குவதில் தாமதம்

திருத்தணி: திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரருக்கு முறையாக பில் தொகை வழங்காததால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அருகே, 12.74 கோடி ரூபாயில் 4.50 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்தாண்டு நிறைவு பெற்றது. அதன்பின், ஏழு மாதங்களுக்கு முன் பேருந்து நுழைவாயிலில், 2.94 கோடி ரூபாயில் முருகன் கோவில் கோபுரங்கள் அமைக்கப்பட்டது. அதன்பின், தரைத்தளம் மட்டும் அமைக்காமல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நான்கு மாதங்களுக்கு முன், பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தரைத்தளம் அமைப்பதற்கு, 5.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளுக்கு ஒன்றரை மாதத்திற்கு முன் 'டெண்டர்' விடப்பட்டது. ஆனால், கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணிகளை துவங்காமல், ஒப்பந்ததாரர் காலம் தாழ்த்தி வருகிறார். இதற்கு காரணம், புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு 'டெண்டர்' எடுத்த ஒப்பந்த தாரருக்கு, பில் தொகை வழங்காததால், ஒன்றரை ஆண்டாக பேருந்து நிலைய பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. நான்கு மாதமாக பேருந்து நிலைய பணிகள் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கான்கிரீட் தளம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும், பில் தொகை வழங்காததால் பேருந்து நிலைய பணிகள் நிறுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று மாதத்திற்குள், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிய பேருந்து நிலைய பணிகள் துவங்காததால், நடப்பு ஆட்சியில் பேருந்து நிலையம் திறப்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிய பேருந்து நிலைய பணிகளை முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை