| ADDED : ஜன 24, 2024 12:50 AM
மீஞ்சூர்:வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவிலின் மரத்தேர், சிதிலமடைந்ததை தொடர்ந்து, கடந்த, 2016ல் புதிய தேர் உருவாக்கப்பட்டது.நிலையில் நிறுத்தி வைக்கப்படும் மரத்தேர் மழை, வெயிலில் பாதிப்படைவதை தவிர்க்க, மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொதுநலச் சங்கத்தின் சார்பில், இரும்பு ஷட்டருடன் கூடிய தனி கட்டடம் அமைத்து தரப்பட்டது.பிரம்மோற்சவத்தின்போது, தேர் கட்டடத்தில் இருந்து வெளியில் கொண்டு வரப்படும். வரதராஜ பெருமாள் தேரில் இருந்தபடி மாடவீதிகள் வழியாக வலம்வந்து அருள்பாலிப்பார்.திருவிழா முடிந்தவுடன், தேர் நிலையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு ஷட்டர்களும் பூட்டப்படுகிறது.கடந்த மாதம் வீசிய மிக்ஜாம் புயலின்போது தேர் நிற்கும் கட்டடத்தின் ஷட்டர் சேதமடைந்தது. சூறைக்காற்றில் ஷட்டரின் ஒரு பகுதி உள்வாங்கி சிதைந்து இருப்பதால், திறக்க முடியாத நிலை உள்ளது. இதுவரை அது சீரமைக்கப்படாமல் உள்ளது.பங்குனி பிரம்மோற்சவம் வரும் நிலையில், சேதம் அடைந்துள்ள தேர் கட்டடத்தின் ஷட்டரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.