உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம், உபகரணங்கள் அனுப்பி வைப்பு

ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம், உபகரணங்கள் அனுப்பி வைப்பு

பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபையில், ஆண்கள், 1,25,362, பெண்கள், 1,31,296, திருநங்கைகள், 29, என மொத்தம், 2,55,687 வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர். இந்த மையங்களுக்கான தேவையான, ஒட்டுப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் கடந்த, மாதம், 24ம் தேதி திருவள்ளூரில் இருந்து பொன்னேரிக்கு கொண்டு வரப்பட்டு, பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக்கல்லுாரியில் பிரத்யோகமாக அமைக்கப்பட்ட, இரண்டு, ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. பொன்னேரி சட்டசபைக்கு என, 373ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 373 கட்டுப்பாட்டு இயந்திரம், 404 விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை அங்கு வைக்கப்பட்டிருந்தது. 'ஸ்ட்ராங் ரூம்' பூட்டி சீல் வைக்கப்பட்டு, சிசிடிவி வாயிலாக கண்காணிக்கப்பட்டும், 24மணிநேரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பிலும் இருந்தது. ஓட்டுப்பதிவு மையங்களுக்கு இயந்திரங்கள் கொண்டு செல்வதற்காக நேற்று காலை, பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த தலைமையில் தேர்தல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், 'ஸ்ட்ராங் ரூமின்' சீலை உடைத்தனர். பின், அங்கிருந்த ஓட்டுப்பதிவு, கட்டுப்பாடு மற்றும் விவிபேட் ஆகிய இயந்திரங்கள், மண்டலம் வாரிய லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.மொத்தம் உள்ள, 311 ஒட்டுப்பதிவு மையங்கள், 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர் தலைமையில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில், இன்று, மொத்தம், 330 ஓட்டுச் சாவடிகளில் சட்டசபை தேர்தல், காலை, 7:00 மணி முதல் மாலை,, 6:00 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான இயந்திரங்கள்,விபேட் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் க.தீபா தலைமையில், தாசில்தார் மதியழகன், வருவாய் துறையினர், போலீஸ் பாதுகாப்புடன், 27 மண்டல அலுவலர்கள் மூலம், மொத்தம், 27 வாகனங்கள் மூலம் 330 ஓட்டுச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், தேர்தல் பணியில் ஈடுபடும், 1500 அரசு ஊழியர்களுக்கு, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடி எண் மற்றும் அதற்கான ஆணைகளையும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீபா வழங்கி, தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்தனர்.இதுதவிர, 330 ஓட்டுச்சாவடிகளில் அந்தந்த வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கி பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் லோக் சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதயில், மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவை, 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான உட்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், உபகரணங்கள் ஆகியவை பலத்த போலீஸ் மற்றும் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தலைமையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பணிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்து, மிகுந்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என தெரிவித்தார். ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட லாரிகளுக்கு முன்னால் அந்தந்த மண்டல அலுவலர்கள் வழி காட்டியபடி காரில் சென்றனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியாக சென்று மண்டல அலுவலர்கள், அந்தந்த ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களிடம் ஓட்டுப்பதிவு எந்திரங்கள், விவிபேட், உபகரணங்கள் ஆகியவற்றை ஒப்படைத்து கையொப்பம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி