சிப்காட் அருகே டாஸ்மாக் கடைகளால் தொழிலாளர்கள் பாதிப்பதாக குற்றச்சாட்டு பலமுறை புகார் செய்தும் இடம் மாற்றாததால் அதிருப்தி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகங்கள் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த கடைகளை இடம் மாற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் முறையிட்டும், தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் மொத்தம், 220 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனைத்து தொழிற்சாலைகளும், 24 மணி நேரமும் இயங்குவதால், 24 மணி நேரமும் தொழிலாளர்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதான சாலைகளில், தனியாருக்கு சொந்தமான இடங்களில், மூன்று டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அதேபோல், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும், தொழிலாளர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுகிறது. இதனால், நான்கு டாஸ்மாக் கடைகள் முன், எப்போதும் திருவிழா கூட்டம் போல், தொழிலாளர்களால் நிரம்பி வழியும். இரு சிப்காட் வளாகங்களில், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் சாம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைகளில் இழந்து வருகின்றனர். மேலும், பல தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லும் ஆபத்தான நிலை தொடர்கிறது. இதனால், தொழிற்சாலை விபத்தில் சிக்கும் தொழிலாளர்கள், உற்பத்தி பாதிப்பு போன்ற இக்கட்டான சூழல்நிலைக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தள்ளப் படுகின்றனர். கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாக தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, மேற்கண்ட நான்கு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம், பல ஆண்டுகளாக சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அதிருப்தியில் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உள்ளனர். தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு, சிப்காட் வளாகம் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை அகற்ற முன்வர வேண்டும். மேலும், திருவள்ளூர் கலெக்டர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழிற்சாலைகள் அருகே டாஸ்மாக் கடைகள் இயங்க அனுமதித்தால், கண்டிப்பாக தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதிக்கும். உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள சிக்கல்களுடன், மதுபோதையில் சிக்கும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சமாளிப்பது கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. - தனியார் தொழிற்சாலை மனித வளத்துறை மேலாளர், கும்மிடிப்பூண்டி. சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தினர் முறையாக மனு அளித்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். - டாஸ்மாக் அலுவலர், திருவள்ளூர்.