மணவாளநகர்: தி.மு.க.,வின் அராஜகம் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார்களை அதிகப்படுத்த வேண்டுமென, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் தனியார் ஹோட்டலில் நேற்று, திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க, வழக்கறிஞர் பிரிவு சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அ.தி.மு.க, வழக்கறிஞர் பிரிவு திருவள்ளூர் மாவட்ட செயலர் உதயகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலருமான ரமணா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது, முன்னாள் அமைச்சர் ரமணா பேசியதாவது: வரும் 2026 சட்டசபை தேர்தல் சவாலானது. அதற்கான முன்னோட்டம் தான் இந்த எஸ்.ஐ.ஆர்., பணியாக நாம் பார்க்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள், தற்காலிக ஊழியர்களை, பி.எல்.ஓ., ஆக நியமித்திருக்கின்றனர். அவர்களுக்கு சரிவர தெரியாததால், அரசியல் கட்சியினர் உதவி செய்து வருகின்றனர். இதை, தி.மு.க.,வினர் தவறாக பயன்படுத்துகின்றனர். இதை நாம் புகாராக்க வேண்டும். மேலும், கலெக்டர் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளிடம், தி.மு.க.,வின் அராஜகம் குறித்த புகார்களை அதிகப்படுத்த வேண்டும். கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிப்பட்டு பகுதியில், பி.எல்.ஓ.,வாக நியமிக்கப்பட்ட ஜெயந்தி என்பவருக்கு பதிலாக, அவரது கணவரான தி.மு.க.,வைச் சேர்ந்த வார்டு உறுப்பினர் குணசேகரன் வேலை செய்து வருவதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, பி.எல்.ஓ., பணியிலிருந்து ஜெயந்தி விடுவிக்கப்பட்டார். எனவே, தி.மு.க.,வினரின் அராஜகங்களை புகாராக்க, வழக்கறிஞர்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதேபோல், எஸ்.ஐ.,ஆரில் உள்ள குளறுபடிகளை கண்டித்து, நேற்று திருவள்ளூரில் த.வெ.க., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.