பொன்னேரி:ஆறு கிராமங்களின் விவசாய நிலங்களின் வடிகால்வாய், 10 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருப்பதால், மழைக்காலங்களில், 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாழாவதால், விவசாயிகள் வருவாய் இழப்பிற்கு ஆளாகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அரவாக்கம், மத்ராவேடு, மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஏருசிவன், ஆசானபூதுார் ஆகிய கிராமங்களில், 2,000 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இந்த கிராமங்களின் விவசாய நிலங்களில் மழைநீர் வெளியேற்றுவதற்காக, 2 கி.மீ., நீளமுள்ள வடிகால்வாய் உள்ளது.மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை, விவசாயிகள் இந்த வடிகால்வாய் வழியாக வெளியேற்றி நெற்பயிர்களை பாதுகாத்து வந்தனர்.கால்வாயில் வெளியேறும் மழைநீர், வஞ்சிவாக்கம், ஆசானபூதுார் ஏரிகளுக்கு செல்கிறது. இந்த வடிகால்வாய் முழுதும் புதர் மண்டியும், முட்செடிகள் வளர்ந்தும், துார்ந்தும் கிடக்கிறது. பெரும்பாலான இடங்களில் கரைகள் இல்லாமல் கால்வாயும், விவசாய நிலங்களும் சமப்பரப்பில் உள்ளன. இதனால், விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் வடிகால்வாயில் வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்படுகிறது. அவை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கும். ஆறுதல்
அச்சமயங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கிறது. இதனால், விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கும். வடிகால்வாய் துார்ந்து கிடப்பதால், அதன் வழியாக வெளியேறாமல், நெற்பயிர்களை மூழ்கடிக்கிறது.விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு, 10 - 15 நாட்களாகும் நிலையில், நெற்பயிர்கள் அழுகி வீணாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சம்பா பருவத்தின்போது, 500 ஏக்கரில் விவசாயம் பாதிக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.மழைநீரில் மூழ்கும் நெற்பயிர்களை பார்வையிட வரும் வருவாய், வேளாண் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், கால்வாயை துார்வாரி தருவதாக விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி செல்கின்றனர்.அதன்பின், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால் விவசாயிகள், அரசின் நடவடிக்கைக்காக காத்திருந்து விரக்தி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு விவசாயிகள் நலன் கூட்டத்திலும், இக்கிராம விவசாயிகள், கால்வாய் துார்வாருவது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.தற்போதும் அதே நிலை தொடர்வதால், சொர்ணவாரி பருவம் முடிந்த பின், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடாமல், நிலங்களை தரிசாகப் போட முடிவெடுத்து உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:பொதுப்பணித்துறையிடம் ஒவ்வொரு முறை தெரிவிக்கும்போது, கால்வாயை துார்வாருவதற்கு, 2 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பணிகளை துவங்குவோம் என தெரிவிக்கின்றனர். நடவடிக்கை
ஆனால், அரசு நிதி ஒதுக்கியதாக தெரியவில்லை. மேலும், துார்வாரும் பணிகளை துவக்காமல், ஆண்டுதோறும் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி விவசாயம் பாதிப்பது மட்டும் தொடர்கிறது.விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறது. அதனால், நடப்பாண்டு சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடுவதை தவிர்த்து விடலாம் என உள்ளோம். அதற்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.