ஊராட்சியில் விநியோகிக்கும் குடிநீரால் சுகாதாரம் கேள்விக்குறி! நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பில் அதிகாரிகள் அலட்சியம்
கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பராமரிப்பில்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளால் விநியோகிக்கப்படும் குடிநீரால், மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிகாரிகள் அலட்சியம் காரணமாக குளோரினேஷன் செய்யாமலேயே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப 10,000 - 2 லட்சம் லிட்டர் வரை, 4,500க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இந்த குடிநீர் தொட்டிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் முறையாக பராமரிப்பு இல்லாததால், தற்போது 1,500க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளன. சேதமடைந்த குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. மேலும், குளோரினேஷன் செய்யப்படாமல் குடிநீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் குடிநீர், சில நேரங்களில் நிறம் மாறி, சேறு கலந்து வருவதோடு, துர்நாற்றம் வீசுவதால், பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஊராட்சி பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 800க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டும், பயன்பாட்டிற்கு வரவில்லை என, பகுதிமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அகற்றி, ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்தில் கட்டப்பட்ட தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிநீரை குளோரினேஷன் செய்து விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் உத்தரவுக்கு பின் இடித்து அகற்றப்படும். ஜல் ஜீவன் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய குடிநீர் தொட்டிைsளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குளோரினேஷன் செய்து குடிநீர் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். - ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி.