பி.டி.ஓ., அலுவலகத்தில் குடிநீர் இயந்திரம் ரிப்பேர்
திருவாலங்காடு:திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலரான, பி.டி.ஓ.,வின் அலுவலகத்தில் உள்ள, ஆர்.ஓ., வாட்டர் இயந்திரம் பழுதாகி விட்டதால், பகுதி மக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் குடிநீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர். திருவாலங்காடில், திருவள்ளூர் ---- அரக்கோணம் நெடுஞ்சாலையில், பி.டி.ஓ., அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு, 42 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கானவர்கள், பல்வேறு பணிகள் தொடர்பாக தினமும் வந்து செல்கின்றனர். அவர்களுக்காகவும், அலுவலக பணியாளர்களுக்காகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆர்.ஓ., வாட்டர் இயந்திரம் நிறுவப்பட்டது.சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இயந்திரம், பின் பழுதாகி விட்டது. இதனால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். நீண்ட நேரம் காத்திருக்கும் பட்சத்தில், குடிநீருக்காக தொலைவில் உள்ள கடைகளுக்கு அலைய வேண்டியுள்ளது. அதேபோல, அலுவலக ஊழியர்களும், பணம் கொடுத்து குடிநீரை வாங்கும் நிலைமை உள்ளது. எனவே, பழுதடைந்து உள்ள ஆர்.ஓ., வாட்டர் இயந்திரத்தை உடனடியாக சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறுகையில், 'பி.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.ஓ., வாட்டர் இயந்திரம் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு இடங்களிலும் பில்டர் பழுதாகி உள்ளது; சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.