வயலில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள் பி.என்.கண்டிகையில் விவசாயிகள் தவிப்பு
பொன்னேரி:விளைநிலங்களில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால், அறுவடை பணிகளின்போது விவசாயிகள் தவித்து வருகின்றனர். பொன்னேரி அடுத்த பி.என்.கண்டிகை கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப் படுகி றது. இங்குள்ள விவசாய நிலங்களின் வழியாக செல்லும் மின் ஒயர்கள் கைக்கு எட்டும் தொலைவில் தாழ்வாக செல்கின்றன. இதனால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். உழவு மற்றும் அறுவடை பணிகளின்போது, இயந்திரங்கள் கொண்டு செல்லும்போது, மின் ஒயர்கள் அவற்றின் மீது உரசுகின்றன. அச்சமயங்களில், மரக்கட்டைகளின் உதவியுடன் மின் ஒயர்களை துாக்கி பிடித்து பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. இது விவசாயிகளின் பாதுகாப்புக்கு கேள்விக் கு றியாகி வருகிறது. மேலும், மின் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு, ஆழ்துளை மோட்டார்களும் பழுதடைகின்றன. மின் வாரியத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க, மேற்கண்ட கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை சீரமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.