வெள்ளோடையில் கால்வாய் தடுப்பணை சேதம் மழைநீர் தேங்காததால் விவசாயிகள் அதிருப்தி
பொன்னேரி:பொன்னேரி அடுத்த, தச்சூர் பகுதியில் இருந்து, ஆண்டார்குப்பம், வெள்ளோடை, மூகாம்பிகை நகர் வழியாக ஆரணி ஆற்றிற்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்காக, தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ், 2014ல், வெள்ளோடை கிராமத்தில், இந்த கால்வாயின் குறுக்கே, குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக, 9 லட்சம் ரூபாயில் சிறிய தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. இது கால்வாயின் குறுக்கே, 20 மீ., நீளம், ஒரு மீ., உயரத்தில் அமைக்கப்பட்டது.மழைக்காலங்களில் தடுப்பணையில், மழைநீர் தேக்கி வைக்கப்பட்டதால், கால்வாயின் அருகில் விவசாய நிலங்களுக்கு பயனள்ளதாக இருந்தது.நிலத்தடி நீரும் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாததால், மூன்று ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை சேதம் அடைந்தது.தடுப்பணையின் பக்கவாட்டு சுவர்கள் உடைந்து கால்வாயில் விழுந்தன. மண் அரிப்பை தடுக்க பதிக்கப்பட்ட பாறை கற்களும் சரிந்தன. தடுப்பணையின் கீழ்பகுதியில், ஆங்காங்கே சிறு சிறு ஓட்டைகள் விழுந்தன.சேதம் அடைந்த தடுப்பணை சீரமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.கடந்த மாதம், 'பெஞ்சல்' புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அதே சமயம் தடுப்பணைக்கு வந்த மழைநீர் உடைப்புகள் வழியாக வெளியேறி ஆரணி ஆற்றில் சென்று கலந்துள்ளது.தற்போது தடுப்பணையில் தண்ணீர் இன்றி கிடக்கிறது. இது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இனிவரும் காலங்களிலாவது, மழைநீரை சேமித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், மேற்கண்ட தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.