வல்லுார் அணைக்கட்டில் ஓட்டை நீர்க்கசிவால் விவசாயிகள் கவலை
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வல்லுார் அணைக்கட்டு உள்ளது.மழைக்காலங்களில் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், மீஞ்சூரை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குடகிறது.கடந்தாண்டு மழையின்போது தேங்கிய தண்ணீர், கோடைக்காலத்தில் வறண்டது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், அணைக்கட்டிற்கு நீர்வரத்து இருக்கிறது.அதேசமயம், அணைக்கட்டின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு ஓட்டைகள் ஏற்பட்டு, அவற்றின் வழியாக தேங்கியுள்ள தண்ணீர் கசிந்து வெளியேறி வீணாகி வருகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இனி வரும் நாட்களில், அணைக்கட்டிற்கு நீர்வரத்து அதிகரிக்கும். தண்ணீர் தேக்கி வைக்கப்படுவது அதிகரிக்கும்போது, ஆங்காங்கே உள்ள ஓட்டைகள் மேலும் பலவீனம் அடையும்.இதனால், அணைக்கட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. மழைநீர் அதிகரிக்கும் முன் நீர்வளத்துறையினர் உடனடியாக ஆய்வு செய்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.