உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெல் கொள்முதல் விலை கிலோ ரூ.30 அரசு உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் விலை கிலோ ரூ.30 அரசு உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: தமிழகத்தில் நெல் கொள்முதல் விலையை அரசு, கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட நெல் விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது: திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், விவசாயிகள் அதிக நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தற்போது நெல் விலை குறைவாக இருப்பதால், விவசாயிகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒடிஷா மாநிலத்தில் தற்போது, கிலோ நெல் 31 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால் தமிழகத்தில், கிலோவிற்கு 24.50 ரூபாயாக உள்ளது. தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் போது, கிலோவிற்கு 20 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அனைத்து விவசாயிகளும் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. காரணம், மாவட்டத்தில் போதுமான கிடங்குகள், சேமிப்பு வசதி இல்லாதது தான். இதனால் பல விவசாயிகள், தங்கள் உற்பத்தியை குறைந்த விலையில் தனியாரிடம் விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், விவசாயிகள் தங்கள் சாகுபடிக்காக வாங்கிய கடன்களை கூட அடைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நெல் கொள்முதல் விலையை கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ