உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் வளர்ந்த கருவேல மரங்கள் சீரமைக்க விவசாயிகள் காத்திருப்பு

ஏரியில் வளர்ந்த கருவேல மரங்கள் சீரமைக்க விவசாயிகள் காத்திருப்பு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் தேங்கும் மழைநீர் வாயிலாக, 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரி முழுதும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், தேங்கும் மழைநீர் வேகமாக உறிஞ்சப்பட்டு, கோடைக்கு முன்பே வறண்டு விடுகிறது.இந்த கருவேல மரங்களை அகற்றி, ஏரியை துார்வார வேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. தற்போது, ஏரி தண்ணீரின்றி வறண்டு இருப்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:கருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால், நீர்நிலைகள் வேகமாக வறண்டு விடுவதுடன், மற்ற தாவரங்கள், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இந்த ஏரியை சுற்றியுள்ள பனப்பாக்கம், இலுப்பாக்கம், குமரஞ்சேரி கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை கொண்டது. ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது. ஏரியில் தேங்கும் தண்ணீர் மட்டுமே பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏரி துார்வாராமல் இருப்பதால், ஏரியின் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்க முடிவதில்லை.தேங்கும் தண்ணீரும் கருவேல மரங்களால் வேகமாக உறிஞ்சப்பட்டு, ஏரி வறண்டு விடுகிறது. நடப்பாண்டாவது ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றவும், துார்வாரி சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை