உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  விதிமீறி முதல் வகுப்பில் பயணிப்போரால் மின்சார ரயில் பெண் பயணியர் அச்சம்

 விதிமீறி முதல் வகுப்பில் பயணிப்போரால் மின்சார ரயில் பெண் பயணியர் அச்சம்

திருநின்றவூர்: சென்னையிலிருந்து அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்களுக்கு, நாளொன்றுக்கு, 285க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மொத்தமாக, 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களில், அதிகபட்சமாக நான்கு பெட்டிகள் வரை முதல் வகுப்பிற்கும், மகளிர் பெட்டிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை சாதாரண பெட்டிகள். திருநின்றவூரில் இருந்து சென்னை நோக்கி, மாணவ -- மாணவியர், வேலைக்கு செல்வோர் என, நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இதனால், சாதாரண வகுப்பு பெட்டிகளில் எப்போதும் பயணியர் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், கடந்த சில மாதங்களாக, சாதாரண வகுப்பை விடவும், முதல் வகுப்பில் அதிகமானோர் பயணம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், பெரும்பாலானோர், சாதாரண வகுப்பிற்கான டிக்கெட்டை எடுக்கின்றனர். ஆனால், முதல் வகுப்பில் பயணிக்கின்றனர். இதுபோன்ற முறைகேடான பயணத்தை, ரயில் நிலையங்களில் உள்ள ஆர்.பி.எப்., போலீசாரும் கண்டுகொள்வதில்லை. டிக்கெட் பரிசோதகர்களும் கண் துடைப்புக்காக, கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். முதல் வகுப்பில் முறைகேடாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், சாதாரண வகுப்பில் நடந்து வந்த, பிக் பாக்கெட், செயின் பறிப்பு சம்பவங்கள் முதல் வகுப்பிலும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்துக்கு பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. திருநின்றவூர் ரயில் பயணியர் நல சங்கத்தைச் சேர்ந்த முருகய்யன் கூறியதாவது: மகளிர் பெட்டியை அடுத்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள, அதிக பணம் கொடுத்து பெண்கள், முதல் வகுப்பில் பயணிக்கின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக, சாதாரண டிக்கெட் எடுத்தும், டிக்கெட்டை எடுக்காமலும், முதல் வகுப்பில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி, சமூக விரோத செயலும் நடக்கின்றன. எனவே, குற்றச்செயல்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனே கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி