திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், கடந்த 19 நாட்களாக நடந்த வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம், நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. வெளியூர் நபர்கள் உடனடியாக வெளியேற, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பிரதான கட்சி மற்றும் சுயேச்சை என, 31 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 28ம் தேதி நடந்த பரிசீலனையில், 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.யாரும் வேட்பு மனு வாபஸ் பெறாததால், காங்.,- சசிகாந்த் செந்தில், தே.மு.தி.க., - நல்லதம்பி, பா.ஜ., - பொன் பாலகணபதி, நாம் தமிழர் கட்சி - ஜெகதீஷ் சந்தர் மற்றும் சுயேச்சை என, மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகாரிகள் ஆய்வு
கடந்த 18 நாட்களாக பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரும், அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதான கட்சி தலைவர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.இவர்களின் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நேற்று தொகுதி முழுதும் வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நேற்று மாலை 6:00 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொள்ள கூடாது என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பிரசாரம் நிறைவடைந்தது.இந்நிலையில், பிரசாரத்திற்கு வந்திருந்த வெளியூர் நபர்கள் அனைவரும் உடனடியாக திருவள்ளூர் தொகுதியில் இருந்து வெளியேற மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், தொகுதிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபம், தங்கும் விடுதிகளில் வெளியூர் ஆட்கள் யாரும் இருக்கின்றனரா என, அதிகாரிகள் ஆய்வு செய்யவும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.இந்த நிலையில், லோக்சபா தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதற்காக, தொகுதியில் உள்ள, 2,256 ஓட்டுச் சாவடிகளுக்கு தேவையான, 2,714 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஆறு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 'ஸ்ட்ராங் ரூமில்' போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை, ஓட்டுப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள், மை உள்ளிட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கும்மிடிப்பூண்டி
அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும் என, கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின்படி, கும்மிடிப்பூண்டியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி மேற்பார்வையில், ஆந்திர எல்லையோர தமிழக சோதனைச்சாவடியில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுடன், உள்ளூர் போலீசாரும் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் உத்தரவின்படி, பறக்கும் படையினரும் மத்திய பாதுகாப்பு படையினரும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, பணம் பட்டுவாடா குறித்து தகவல் ஏதேனும் வந்தால் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதை 26 மண்டலங்களாக பிரித்து தனித்தனியே மண்டல அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். உறுதி
ஓட்டுச்சாவடிக்கு தேவையான ஓட்டு பதிவு இயந்திரம், விவிபேட், எழுது பொருட்கள், உபகரணங்கள் அனைத்தையும், அந்தந்த மண்டல அலுவலர்கள் கொண்டு சேர்க்க வேண்டும்.ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மீண்டும் பாதுகாப்பாக எடுத்துச் சென்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.இந்நிலையில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள், அங்கு செல்வதற்காக சாலை வசதி ஆகியவற்றை முன்னதாக ஆய்வு செய்யும் பணியில் நேற்று மண்டல அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.ஒவ்வொரு மண்டல அலுவலர் குழுவினருக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களில் சென்று, நேற்று ஓட்டுச்சாவடி மற்றும் சாலை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.அவற்றில் உள்ள குறை நிறைகளை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷிடம் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கு அடிப்படை வசதி மற்றும் சாலை வசதி உள்ளது என்பதை ஆய்வுக்கு பின் மண்டல அலுவலர்கள் உறுதி செய்தனர்.
பசுமை ஓட்டுச்சாவடி
லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது. திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கான, பசுமை ஓட்டுச் சாவடி மையம், திருவள்ளூர் என்.ஜி.ஓ., காலனியில் உள்ள நகராட்சி தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இதை, கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.அதன்பின் அவர் கூறியதாவது:பசுமை ஓட்டுச்சாவடி மையத்தில், முற்றிலும் சூரிய சக்தி மின்சாரம் பயன்படுத்தப்படும். மண்பானையில் குடிநீர் நிரப்பி, மண் குவளை இருக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், இங்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டு செலுத்தும் வாக்காளர்களுக்கு, தலா ஒரு மரக்கன்று வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
16,220 அலுவலர்கள்
திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தலில், 16,220 ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் பணி மேற்கொள்ள உள்ளனர்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், ஆண்கள் - 1024149, பெண்கள் -1061457, இதரர் - 385 என, மொத்தம் 20,85,991 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு அளிக்க கும்மிடிப்பூண்டி -- 330, பொன்னேரி- - 311, திருவள்ளூர்- - 296, பூந்தமல்லி- - 395, ஆவடி- - 449, மாதவரம் - -475 ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில், 2,256 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக, 16,220 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணி மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக பறக்கும் படை
அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் இரவு, பகலாக வினியோகம் செய்து வருவதாக, அ.தி.மு.க., - பா.ம.க., வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான தீபா தலைமையில் கூடுதலாக பறக்கும் படைகள் அமைத்து, சட்டசபை தொகுதி முழுதும் கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீபா கூறியதாவது: திருத்தணி சட்டசபை தொகுதியில் மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், ஆறு ஓட்டுச்சாவடிகளும், திருத்தணி ஒன்றியத்தில், பட்டாபிராமபுரம் ஓட்டுச்சாவடி என, 7 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.மேலும், இந்த ஓட்டுச்சாவடிகளில் மூன்று பேருக்கு மேல் ஒன்று சேரக்கூடாது என தடைசட்டம் போடப்பட்டு உள்ளன. இதுதவிர, 330 ஓட்டுச்சாவடிகளில், 1,452 பேர் பணிபுரிவர். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக தொடர்ந்து புகார் வந்ததின் பேரில், கூடுதலாக, 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், 27 மண்டல அலுவலர்களும் நேற்று முதல் இரவு, பகலாக தொகுதியும் முழுதும் கண்காணித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து தகுந்த ஆதராத்துடன் புகார் கொடுத்தால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் குழு -