பழவேற்காடில் மீன்பிடி தடைகாலம் துவக்கம் பைபர், நாட்டு படகுகளுக்கு கட்டுப்பாடு இல்லை
பழவேற்காடு,மீன்களின் இனப்பெருக்க காலம் காரணமாக, 61 நாட்களுக்கான மீன்பிடி தடைகாலம், நேற்று நள்ளிரவு முதல் துவங்கி, ஜூன் 14ம் தேதி வரை தொடரும்.தடைகாலத்தில் பெரிய இயந்திர படகுகள், விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதியில்லை. தடைகால நிவாரணமாக, தமிழக அரசு, ஒவ்வொரு மீனவர் சங்க உறுப்பினருக்கும், 8,000 ரூபாய் வழங்குகிறது.பழவேற்காடு பகுதியை பொறுத்தவரை பைபர் படகுகள், நாட்டு படகுகள், கட்டுமரம் ஆகியவற்றை பயன்படுத்தி மீன்படி தொழில் செய்கின்றனர்.இவை, ஆழ்கடல் பகுதிக்கு செல்லாமல், கடற்கரையில் இருந்து, 10 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குள் தொழில் செய்வதால், இந்த படகுகள் பயன்படுத்தும் மீனவர்களுக்கு மீன்பிடிக்க தடை இல்லை. அதேசமயம் சுருக்குமடி வலை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதுகுறித்து பழவேற்காடு மீனவர்கள் கூறியதாவது:ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசை படகுகளில் இரட்டைமடி வலை, இழுவலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படுகின்றன.மீன்களின் இனப்பெருக்க காலத்தில் இந்த வலைகளை பயன்படுத்தும்போது, மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கும் என்பதால், விசை படகுகள் மற்றும் பெரிய இயந்திர படகுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.எங்கள் பகுதியில் பைபர் படகுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதில்லை என்பதால், எங்களுக்கு மீன்பிடிக்க தடை இல்லை. இருப்பினும், தடைகாலத்தில் பெரும்பாலானவர்கள் மீன்பிடிக்க செல்வதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.