ரயிலில் அடிபட்டு நான்கு எருமைகள் பலி
மீஞ்சூர்:தண்டவாளத்தை கடக்க முயன்ற, நான்கு எருமை மாடுகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், தினமும் 80க்கும் அதிகமான புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு, 9:20 மணிக்கு, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்பட்ட புறநகர் ரயில், 10:10 மணிக்கு, எண்ணுார் ரயில் நிலையம் வந்தது. அங்கிருந்து அத்திப்பட்டு புதுநகர் நோக்கி பயணிக்கும் போது, நான்கு எருமை மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. மாடுகள் மீது ரயில் மோதியது. இதில், நான்கு மாடுகள் இறந்தன. அவற்றின் உடல்கள் தண்டவாளத்தின் இடுக்குகள் மற்றும் ரயில் சக்கரத்தில் சிக்கின. தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து வந்த புறநகர் மற்றும் விரைவு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்தனர். தண்டவாளத்திலும், ரயில் சக்கரத்திலும் சிக்கியிருந்த மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். நள்ளிரவு 12:25 மணிக்கு, மாடுகளின் உடல்கள் முழுமையாக அகற்றப்பட்ட பின், புறநகர் ரயிலும், அனைத்து ரயில்களும் கும்மிடிப்பூண்டி நோக்கி பயணித்தன. இதனால் பயணியர் சிரமமடைந்தனர்.