சென்னை:சென்னை, மணலி பெரியதோப்பு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில், 'அன்னை கேபிடல் சொல்யூசன்ஸ்' என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை தினேஷ்குமார் என்பவர் நடத்தி வந்தார். இவர், 2022ல் வெளியிட்ட விளம்பரத்தில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதை உண்மை என நினைத்து, நான் மட்டுமின்றி நுாற்றுக்கணக்கானோர் பணத்தை செலுத்தினோம். ஆனால், வாக்குறுதி அளித்ததுபோல் லாபத் தொகையை கொடுக்காமலும், முதலீடு செய்த பணத்தை திரும்பத் தராமலும் ஏமாற்றி வருகிறார்.எனவே, தினேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், உதவி கமிஷனர் ஜான் விக்டர் தலைமையில் தனிப்படை அமைத்தனர்.விசாரணையில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த பணத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் பயன்படுத்தி, மாதம், 17,100 ரூபாய் என, 12 மாதங்கள் லாபம் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதுவரை, 300 பேரிடம் 15 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக, தினேஷ்குமார், 37, பிரேம் கிருபால், 38, திலீப்குமார், 41, அருண்குமார், 40, ஆகியோரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.