நுாறு நாள் வேலை வழங்க கோரி அரசு பேருந்து சிறைபிடிப்பு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிவாசிகளுக்கு கடந்த சில மாதங்களாக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நுாறு நாள் வேலை சரியாக வழங்காமல், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்தது.ஒரு மாதமாக நுாறு நாள் வேலை ஊராட்சியில் நடக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று நண்பகல் திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், வேலஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.அவ்வழியாக, திருத்தணி நோக்கி வந்த அரசு பேருந்தை சிறைபிடித்தனர். தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'திருத்தணி ஒன்றியத்தில், 26 ஊராட்சிகளிலும் இரு வாரத்திற்கு மேலாக நுாறு நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.'ஆனால், வேலஞ்சேரி ஊராட்சியில் மட்டும் நுாறு நாள் வேலை வழங்கவில்லை' என, அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், 'அடுத்த வாரம் முதல் உங்களுக்கு நுாறு நாள் வேலை வழங்கப்படும்' என, உறுதியளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.