நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: பிச்சாட்டூரில் 648 கன அடி நீர் வரத்து
ஊத்துக்கோட்டை:நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த ம ழையால், பிச்சாட்டூர் ஏரிக்கு வினாடிக்கு, 648 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆற்று நீரை, பிச்சாட்டூர் கிராமத்தில் ஏரி அமைத்து தேக்கி வைக்கப்படுகிறது. இதன் கொள்ளளவு, 1.853 டி.எம்.சி., நீர்மட்டம் 31 அடி. மழைநீர் முக்கிய நீராதாரம். சமீப நாட்களாக பெய்து வரும் மழையால், பிச்சாட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த பலத்த மழையால், வினாடிக்கு 648 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 648 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய கொள்ளளவு, 1.144 டி.எம்.சி., நீர்மட்டம் 25.70 அடி. தொடர்ந்து, மழை பெய்தால் நீர்வரத்து அதிகரித்து, விரைவில் முழு கொள்ளளவை அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.