உயர்மட்ட பாலப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியது
மீஞ்சூர்:சுப்பாரெட்டிப்பாளையம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமையும் ஆற்றுப்பால பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதால், கிராமவாசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம், வேப்பம்கொண்ட ரெட்டிபாளையம் ஆகிய கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்திற்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்தாண்டு துவக்கப்பட்டது.நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 16.50 கோடி ரூபாயில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஆற்றில் 11 துாண்கள் அமைத்து, அதன் மீது 200 மீ., நீளம், 10 மீ., அகலத்தில் ஓடுபாதை அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது, துாண்கள் அமைப்பது, ஓடுபாதை உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளன. தற்போது, ஓடுபாதையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைப்பது, பாலத்தின் இருபுறமும் 100 மீ., நீளத்தில் இணைப்பு சாலை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.மழைக்காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தரைப்பாலம் மூழ்கி, மேற்கண்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்.தற்போது தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர்மட்ட பாலம் அமைந்து, அது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால், மேற்கண்ட கிராமங்கள் நிம்மதி அடைந்துள்ளன.