திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், நகர மற்றும் கிராம பகுதிகளில் அதிகரித்து வரும் கான்கிரீட் சாலைகளால், மழைநீர் சேகரிக்க முடியாமல் வீணாகி விடுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்யும் மூன்று மாதங்கள் மட்டுமே மழைநீர் கிடைக்கும். அதன்பின், ஆறுகளும், ஏரிகளும் நீரின்றி வறண்டு விடும். பருவ காலத்தில் மழை நீரால் கிடைக்கும் நிலத்தடி நீரை வைத்து தான், குடிநீர் மற்றும் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில், பெரும்பாலான இடங்கள் வறண்ட பகுதியாக உள்ளன. அங்கு, வறட்சியை தாங்கும் கம்பு, சோளம், எள் போன்ற சிறுதானியம் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. இந் நிலையில், கிராமம், நகர பகுதிகளில் அதிகரித்து வரும் கான்கிரீட் சாலைகளாலும், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கிறது. கான்கிரீட் சாலைகள் நீர் ஊடுருவலை தடுப்பதால், மழைநீர் நிலத்தடிக்குள் செல்லாமல், மேற்பரப்பில் ஓடி விடுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவது தடைபடுவதாக, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மாவட்டந்தோறும், நிலத்தடி நீரை அதிகரிக்க தரிசு நிலங்களை மேம்படுத்துதல், பண்ணை குட்டை அமைத்தல், மலையடிவாரம் மற்றும் கால்வாய்களில் தடுப்பணை உள்ளிட்ட பணியை மேம்படுத்தி வருகிறது. இருப்பினும், தற்போது ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களிலும், பொது நிதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட இடங்களிலும் கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தார்ச்சாலை மற்றும் சிமென்ட் கல் சாலை அமைத்தால், மழைநீர் ஓரளவிற்கு தரையில் உள்வாங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆனால், கான்கிரீட் சாலை அமைத்தால், மழைநீர் தரையில் தேங்காமல் ஓடி விடும். எனவே, கான்கிரீட் சாலை எண்ணிக்கையை குறைத்து, அதிகளவில் தார்ச்சாலை மற்றும் சிமென்ட் கல் சாலை அமைக்க வேண்டும். மேலும், சாலையோரம் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.