முறைகேடுகளை தடுக்க தனிநபர் ரேஷன் கடைகள்... மாற்றம் மீனவர் கூட்டுறவிடம் இருந்து பறித்து உத்தரவு
பழவேற்காடு : மீனவர் கூட்டுறவு கடன் சங்கத்தின் வாயிலாக தனிநபர்கள் நடத்தி வரும் ரேஷன் கடைகளில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. இதனால், அவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு மாற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருவள்ளூர் மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை, மீனவர் கூட்டுறவு சங்கம் வாயிலாக, 247 ரேஷன் கடைகளில், 1.41 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.இதில், பழவேற்காடு மீனவ பகுதியில், மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில், எட்டு ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்தன. இவற்றில், அரசு அலுவலர்கள் நேரடியாக பணிபுரியாமல், தனிநபர்கள் வாயிலாக மீனவ கிராமங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.இதில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பயனாளிகளுக்கு சரிவர வழங்குவதில்லை, அவை, வெளிசந்தையில் விற்பனை செய்யப்படுவது, பதிவேடுகளை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.தனிநபர்கள் கடைகளை நடத்தி வருவதால், நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் இருந்தன. இதையடுத்து, மீனவ கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் கொண்டுவர, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.நேற்று முதற்கட்டமாக, பழவேற்காடு பகுதியில் உள்ள தோணிரவுகுப்பம், கோரைகுப்பம், கூனங்குப்பம், லைட்அவுஸ்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள நான்கு கடைகள், பனப்பாக்கம் மற்றும் மெதுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.இந்நிகழ்வில், பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரி சிவக்குமார், பொன்னேரி சரக கூட்டுறவு சார் - பதிவாளர் விஜயராகவன், மீன்வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.'நான்கு கடைகளில், 1,407 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இனி, அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் அலுவலர்கள் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 'எஞ்சியுள்ள நான்கு கடைகளும், விரைவில் மாற்றம் செய்யப்படும்' எனவும் தெரிவித்தனர்.இதுகுறித்து பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மீனவ கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் கடைகள், குறிப்பிட்ட நேரத்தில் திறப்பதில்லை; விருப்பம்போல் திறக்கப்படும். பொருட்களும் சரிவர வினியோகம் செய்வதில்லை. இதனால், பெரும்பாலானோர் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.அரசு ஊழியர்களை கொண்டு மீனவ பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை இயக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கீழ் அவை கொண்டு வரப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.இனி முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்காது. மீனவ மக்களுக்கும் ரேஷன் பொருட்கள் குறித்த நேரத்திலும், தடையின்றியும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.