இரவு நேரத்தில் மருத்துவர்கள் இருப்பதில்லை எம்.எல்.ஏ.,விடம் உள்நோயாளிகள் புகார்
திருத்தணி:'திருத்தணி அரசு மருத்துவமனையில், இரவு நேரத்தில் உள்நோயாளிகள் பிரிவிற்கு மருத்துவர்கள் வருவதில்லை' என, ஆய்வுக்கு சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனிடம் நோயாளிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். இரண்டு மருத்துவர்கள்
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 150க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், சில ஆண்டுகளாக மருத்துவமனையில், 17 மருத்துவர்களில், ஒற்றை இலக்கில் மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.போதிய மருத்துவர்கள் இல்லாமல், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக, திருத்தணி மருத்துவமனை தரம் உயர்த்தி, 45 கோடி ரூபாயில், 5 அடுக்கு கட்டடம் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் நேற்று, அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது, புறநோயாளிகளுக்கு சீட்டு கொடுக்கும் இடத்தில் ஒரு பணியாளரே இருந்தார். மேலும், இரண்டு மருத்துவர்களே புறநோயாளிகளுக்கும், உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து வந்ததையும் எம்.எல்.ஏ., பார்த்தார்.தொடர்ந்து மருத்துவமனையில், கழிப்பறை, உள்நோயாளிகள் பிரிவில், ஆய்வு செய்த போது, எம்.எல்.ஏ., விடம் காலையில் மட்டுமே மருத்துவர் வந்து செல்கிறார். இரவு நேரத்தில் மருத்துவர்கள் யாரும் வருவது இல்லை, தங்குவதும் இல்லை. கழிப்பறை துார்நாற்றம் வீசுகிறது என, சரமாரியாக புகார் தெரிவித்தனர். விரைவில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, சுகாதாரம் பாதுகாக்கப்படும் என, நோயாளிகளிடம், எம்.எல்.ஏ., உறுதி கூறினார். ரூ.45 கோடி
தொடர்ந்து, 45 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ., விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு விடப்படும் என, தெரிவித்தார்.முன்னதாக, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதிகாதேவி, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் வெங்கடேஷ், எம்.எல்.ஏ.,வை வரவேற்றனர். ஆய்வின் போது, பொதுப்பணித் துறை கோட்ட உதவி செயற் பொறியாளர் முரளி, நகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.