அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி விநாயகர் சிலைகள் வைக்க அறிவுறுத்தல்
பொன்னேரி: சதுர்த்தி விழாவில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அறிவுறுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்திவிழா, இம்மாதம், 27ம் தேதி நடைபெறுவதையொட்டி, நேற்று பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில், அதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் ரவிக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், காவல் உதவி கமிஷனர் சங்கர், சப் - கலெக்டர் நேரடி உதவியாளர் செல்வகுமார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் விழா குழுவினர்களும் பங்கேற்றனர். அப்போது அதிகாரிகள், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தினர். சிலை நிறுவுதல், ஊர்வலங்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பிப்பது, காவல், தீயணைப்பு, மீன்வாரியம் உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறுவது உள்ளிட்டவைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளைப் பயன்படுத்துதல், சட்டவிரோதமாக மின்சாரம் திருடுவதைத் தவிர்ப்பது, பட்டாசுகளை வெடிக்கத் தடை, காவல் துறையால் குறிப்பிடப்பட்ட நீர்நிலைகளில் கரைத்தல், அதற்கான நேரத்தை பின்பற்றுதல் வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.