மீஞ்சூர்: மீஞ்சூரில் புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படும் என, 2015ல் அறிவித்த மின் வாரியம், 10 ஆண்டுகளாகியும் இன்னும் பணிகளை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், சுற்று வட்டார பகுதிகளின் மின் வினியோகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எதிர்கால தேவை மற்றும் சீரான மின் வினியோகம் கருதி, துணைமின் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, மீஞ்சூர் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். வலியுறுத்தல் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள அரியன்வாயல், எடப்பாளையம், அன்பழகன் நகர், புதுப்பேடு, கேசவபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 20,000 குடியிருப்புகள்; 1,600 கடைகள்; 12 அரசு மற்றும் தனியார் பள்ளிகள்; 10 தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு அலுவலகங்கள், வங்கிகள் என, 22,000க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் உள்ளனர். மேற்கண்ட பகுதிகளுக்கு, 4 கி.மீ., தொலைவில் உள்ள 33 கிலோ வோல்ட் மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து, மின் வினியோகம் நடக்கிறது. மேலுார் துணைமின் நிலையத்தில் இருந்து, நந்தியம்பாக்கம், புங்கம்பேடு, மேலுார், பட்டமந்திரி, சீ மாவரம் ராமரெட்டிப்பாளையம் என, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. மேற்கண்ட துணைமின் நிலையத்தில், அதிக மின்பயனீட்டாளர்கள் இருப்பதால், மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சீரான மின்வினியோகம் கிடைப்பதில்லை. மீஞ்சூர் நகரத்தில் நாளுக்கு நாள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரித்து வருவதால், தற்போது வினியோகிக்கப்படும் மின்சாரம் போது மானதாக இல்லை. இதனால், குறைந்த மின் அழுத்தம், மின்மாற்றிகளில் பழுது மற்றும் மின்வெட்டு ஏற்படுகிறது. சீரான மின் வினியோகத்திற்கு, மீஞ்சூர் பகுதியில் துணைமின் நிலையம் அமைத்து தீர்வு காண வேண்டும் என, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதிருப்தி கடந்த 2015ல், மீஞ்சூரில், 33 கிலோ வோல்ட் புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படும் என, மின்வாரியம் அறிவித்தது. அறிவித்து 10 ஆண்டுகளாகியும் அதற்கான முன்னெடுப்புகள் எதையும் மேற்கொள்ளாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சென்னை புறநகரில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக, மீஞ்சூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன. இதனால் மின் தேவை அதிகரிக்கும் நிலையில், துணைமின் நிலையம் திட்டம் கிடப்பில் இருப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: துணைமின் நிலையம் அமைக்க, மீஞ்சூர் அடுத்த நாலுார் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது. அதற்கான வல்லுநர் குழு ஆய்வு செய்து உள்ளது. விரைவில் துணைமின் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அக்கறை காட்டாத மின்வாரியம் மீஞ்சூர் பகுதியை சுற்றிலும் தொழில் நிறுவனங்கள் இருப்பதால், நகர பகுதியில் சிறு, குறு தொழில்கள் அதிகரித்து உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், குடியிருப்புகளும் இரு மடங்காக அதிகரித்து உள்ளன. புதிய குடியிருப்பு பகுதிகளும் உருவாகி வருகின்றன. மின்தேவை அதிகரிக்கும் நிலையில், துணைமின் நிலையம் அமைப்பதில், மின்வாரியம் அக்கறை செலுத்தாமல் உள்ளது. நாள்தோறும் மின்வெட்டு, குறைந்த மின்அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் தவிக்கிறோம். தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். - டி.ஷேக் அகமது செயலர், மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கம்.