முருகன் கோவில்களில் இன்று கந்த சஷ்டி துவக்கம்
திருவள்ளூர்: முருகன், சூரபத்மனை வதம் செய்த நாளை நினைவு கூறும் வகையில், முருகன் கோவில்களில் கந்த சஷ்டி அபிஷேகம் இன்று துவங்குகிறது. தமிழ் கடவுள் முருகன், சூரபத்மனை வதம் செய்த தினம், சூரசம்ஹாரமாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும், ஐப்பசி மாதம் வளர்பிறையில், பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களையும், முருக பக்தர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர். இதை நினைவு கூறும் வகையில், முருகன் கோவில்களில் இன்று முதல் ஆறு நாட்களும் முருகபெருமானுக்கு காலை - மாலை அபிஷேகம் நடைபெறும். திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறும். ஏழாம் நாளில் உற்சவர் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இன்று கந்த சஷ்டி விழா துவங்குகிறது. அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 8:30 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று மூலவருக்கு புஷ்ப அலங்காரம், நாளை பட்டு அலங்காரம், நாளை மறுநாள் தங்க கவசம், 25ம் தேதி திருவாபரணம், 26ம் தேதி வெள்ளி கவசம், 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு உற்சவர் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு, உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ விஷ்ணு கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும், கந்த சஷ்டி அபிஷேகம் இன்று துவங்குகிறது. வரும் 27ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை கிராமத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆறு நாட்கள் கந்த சஷ்டி விழா இன்று துவங்குகிறது. தினமும் காலை 7:30 மணிக்கு மூலவர் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு வீதியுலாவும் நடைபெறும். வரும் 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு பால சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய் எழுந்தருள்வார். வரும் 28ம் தேதி மாலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உத்சவம் நடைபெறும்.