உள்ளூர் பயணியரை ஏற்ற மறுக்கும் கர்நாடக பஸ்: பயணியர் வாக்குவாதம்
ஆர்.கே.பேட்டை:கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து திருத்தணிக்கு, ஆர்.கே.பேட்டை வழியாக கர்நாடக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து மதியம் 1:30 மணிக்கு, ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணிக்கு வருகிறது.பெங்களூருவில் இருந்து வரும் பயணியரை, ஆர்.கே.பேட்டையில் இறக்கிவிடுகின்றனர். ஆனால், இங்கிருந்து திருத்தணிக்கு பயணியரை ஏற்ற மறுக்கின்றனர்.திருத்தணியில் இருந்து சென்னைக்கு, மதியம் 2:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலில் பயணிக்கும் பயணியர் ஏராளமானோர், நேற்று மதியம் ஆர்.கே.பேட்டையில், 20க்கும் மேற்பட்ட பயணியர் பேருந்துக்காக காத்திருந்தனர்.அப்போது வந்த கர்நாடக அரசு பேருந்தின் ஓட்டுநர், ஆர்.கே.பேட்டையில் பயணியரை இறக்கிய பின், உள்ளூர் பயணியரை ஏற்ற மறுத்து வேகமாக பேருந்தை இயக்கினார். ஒரு பயணி மட்டும், அந்த பேருந்தில் ஓடிச்சென்று ஏறினார்.சிறிது துாரம் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டு, அந்த பயணி இறக்கி விடப்பட்டார். பின், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், அந்த பயணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீசில் ஒப்படைப்பதாக கூறி, பயணியை இழுத்து சென்றனர். பகுதிவாசிகள் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.எனவே, ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணிக்கு நண்பகல் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை தமிழக அரசு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்.கே.பேட்டை பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.