உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குதிரைப்பள்ளம் தடுப்பணை நிரம்பியது கரையோர கிராம விவசாயிகள் நிம்மதி

குதிரைப்பள்ளம் தடுப்பணை நிரம்பியது கரையோர கிராம விவசாயிகள் நிம்மதி

பொன்னேரி: குதிரைப்பள்ளம் - புதுகுப்பம் இடையே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை நிரம்பியதால், கரையோர கிராமங்களில் உள்ள விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, பொன்னேரி அடுத்த குதிரைப்பள்ளம் - புதுகுப்பம் கிராமங்களுக்கு இடையே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 2018ல், 9.90 கோடி ரூபாயில், தடுப்பணை கட்டப்பட்டது. விவசாயத்திற்கும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவும், 335 மீ., நீளம், 1.5 மீ., உயரத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணையில் மழைநீர் தேங்குவதால், கரையோர கிராமங்களில் விவசாயம் பாதிப்பின்றி நடைபெறுகிறது. நடப்பாண்டு தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஆகியவற்றால், தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிகிறது. இது, விவசாயிகள் இடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தடுப்பணை நிரம்பி வழிவதால், 1.5 கி.மீ., சுற்றளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஜெகன்னாதபுரம், குதிரைப்பள்ளம், பசுவன்பாளையம், புதுகுப்பம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். ஆற்றின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று தடுப்பணைகள் அமைத்தால், அவற்றில் தேக்கி வைக்கப்படும் மழைநீர், கோடையில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை